search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதார் ஆணையம்"

    • ஆதாரில் ஆவணங்களை புதுப்பித்து வைத்திருப்பது, சிறந்த சேவைகள் பெற உதவுகிறது.
    • தற்போதைய அடையாளச் சான்று, முகவரிச் சான்றுடன் புதுப்பிப்பது நன்மை அளிக்கும்.

    ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த நவம்பர் 9ந் தேதி அன்று அறிவிக்கப்பட்ட ஆதார் விதிமுறைகள் 2022-ன் கீழ், பொது மக்கள் தங்கள் ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

    10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை வழங்கப்பட்ட நிலையில், இது வரையில் புதுப்பிக்காத ஆதார் அட்டையை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு அதை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.

    மை ஆதார் போர்ட்டல் மூலம் ஆன்லைனிலும் அல்லது அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்றும் தேவையான ஆவணங்களை (அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று) பதிவேற்றுவதன் மூலம் பொது மக்கள் தங்கள் ஆதார்களைப் புதுப்பிக்கலாம்.

    மத்திய அரசின் நல்வாழ்வுத் திட்டங்களில் 319 சேவைகள் உட்பட 1,100 க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் அதன் சேவைகளை வழங்க ஆதார் அடிப்படையிலான அடையாளம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

    வங்கிகள், வங்கி-சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் பலவேறு நிதி வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை அங்கீகரித்து, அனைத்து வகையான சேவைகளை வழங்க ஆதாரைப் பயன்படுத்துகின்றன.

    ஆதார் அட்டையை தற்போதைய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுடன் புதுப்பித்து வைத்திருப்பது பொது மக்களுக்கு நன்மை அளிக்கும். மேலும் சிறந்த சேவைகள் மற்றும் துல்லியமான அங்கீகாரத்தை பெறுவதற்கு உதவும்.

    எனவே பொது மக்கள் தங்களுடைய ஆதார் எண்ணை புதுப்பிக்கத் தேவையான ஆவணங்களை இணைக்குமாறு வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தொலைத்தொடர்பு துறை மற்றும் ஆதார் ஆணையம் அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. #Aadhar #AadhaarJudgment
    புதுடெல்லி:

    மொபைல் இணைப்புகள் பெறும்போது, கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் தொடர்பான விவரங்கள் பெறப்படுகின்றன. ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால், அதன் மூலம் தனிப்பட்ட விவரங்களை எடுத்துக்கொள்ளும் நடைமுறையில் சுமார் 50 கோடி மொபைல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் சந்தையில் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ, சுமார் 25 கோடி இணைப்புகளை இவ்வாறு வழங்கியுள்ளது. பாரதி ஏர்டெல், வோடஃபோன் - ஐடியா, பிஎஸ்என்எல் போன்றவையும் இவ்வாறு இணைப்புகளை வழங்கியுள்ளன.

    ஆதார் இணைப்பின் மூலம் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாகி விடுவதால், காகித ஆவணங்களை அழித்துவிடலாம் என கடந்த ஆண்டு மார்ச்சில் மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனவே, மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைத்த வாடிக்கையாளர்கள், அதற்கு முன்னர் விவரங்களை நிரப்பி வழங்கிய, கேஒய்சி ஆவணங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் அழிக்கப்பட்டிருக்கக்கூடும்.

    இந்த நிலையில்தான், தனிநபர்களின் தனித்துவ அடையாளத்தை (ஆதார்), சான்று ஆவணங்களுக்காக தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. எனவே, ஆதார் மூலம் கேஒய்சி விவரங்கள் பெறப்பட்ட 50 கோடி மொபைல் இணைப்புகளுக்கு, புதிதாக வாடிக்கையாளர் விவரங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெறும் நிலை உருவாகியுள்ளது.



    தொலைத்தொடர்பு செயலர் அருணா சுந்தரராஜன் மொபைல் நிறுவனங்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், விரைவில் இதுதொடர்பாக தொலைத்தொடர்புதுறை உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக தொலைத்தொடர்பு துறை மற்றும் ஆதார் ஆணையம் (UIDAI) கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிட்டு உள்ளன. அதில் 50 கோடி மொபைல் எண்கள் துண்டிக்கப்படும் ஆபத்தில் இருப்பதாக வெளியான செய்தியை மறுத்துள்ளன. ஆதார் சரிபார்ப்பு அடிப்படையில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டால், புதிய அடையாளம் கேட்கபடமாட்டாது என கூறி உள்ளது.

    ஆதார் eKYC மூலம் வழங்கப்பட்ட மொபைல் எண் துண்டிக்கப்பட வேண்டும் என்று அதன் ஆதார் தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட் எங்கும் சுட்டி காட்டவில்லை என்று கூட்டு அறிக்கை தெளிவுபடுத்துகிறது. #Aadhar #AadhaarJudgment

    ஆதார் தகவல்களை நீக்குவது தொடர்பாக15-ந் தேதிக்குள் ஆதார் ஆணையத்துக்கு டெலிபோன் சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் சமர்ப்பித்திட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. #UIDAI #Telecom #Aadhaar
    புதுடெல்லி:

    டெலிபோன் சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் 12 இலக்கம் கொண்ட ஆதார் அட்டை தகவல்களை பெறவேண்டியது கட்டாயமில்லை என்று கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து ஏற்கனவே வாடிக்கையாளர்களிடம் டெலிபோன் நிறுவனங்கள் பெற்ற தகவல்களை நீக்குவது குறித்த நடவடிக்கையை ஆதார் ஆணையம் தொடங்கி உள்ளது.



    இதுபற்றி ஆதார் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், ‘டெலிபோன் சேவை வழங்கும் அத்தனை நிறுவனங்களும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்று உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏற்கனவே, வாடிக்கையாளர்களை அறிவோம் திட்டத்திற்காக பெற்ற ஆதார் தகவல்களை நீக்குவது தொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவற்றை அப்புறப்படுத்துவது குறித்த திட்டங்களை வருகிற 15-ந் தேதிக்குள் ஆதார் ஆணையத்துக்கு டெலிபோன் சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் சமர்ப்பித்திட வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

    இதுபற்றி ஆதார் ஆணையத்தின் தலைமை அதிகாரி அஜய் பூஷண் கூறுகையில், “டெலிபோன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் பெற்ற ஆதார் தகவல்களை சுமூகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காகத்தான் இது தொடர்பான திட்டத்தை அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். இதில் எங்கள் தரப்பில் இருந்து ஏதாவது தேவை என்றால் டெலிபோன் நிறுவனங்கள் அளித்த திட்டங்களுக்கு பின்னர் இதுபற்றி தெரிவிக்கப்படும்” என்றார்.  #UIDAI #Telecom #Aadhaar
    ஆதார் சட்ட வழக்கில் தலைமை நீதிபதி உள்பட 4 நீதிபதிகள் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி சந்திரசூட் மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதோடு அரசை கடுமையாக சாடினார். #AadhaarVerdict #JusticeChandrachud
    புதுடெல்லி:

    ஆதார் வழக்கில் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சிக்ரி ஆகியோர் ஒரே தீர்ப்பாக வழங்கினார்கள். இவர்கள் 3 பேருக்கும் சேர்த்து நீதிபதி சிக்ரி தீர்ப்பை வாசித்தார். மற்றொரு நீதிபதி அசோக் பூஷன் மாறுபட்ட தீர்ப்பை வழங்கவில்லை என்கிற போதிலும் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகத் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

    இதில் ஆதார் சட்டம் அரசியல்சாசனப்படி செல்லுபடியாகும். அரசின் சேவைகளைப் பெற ஆதார் அவசியம். அதேசமயம், ஆதார் இல்லாததைக் காரணம் காட்டி அரசின் சேவைகளை மக்களுக்கு அளிப்பதை நிறுத்தக்கூடாது. தனியார் நிறுவனங்கள் மக்களிடம் இருந்து ஆதார் விவரங்களைப் பெறக்கூடாது என்று கூறி ஆதார் சட்டத்தில் 57-வது பிரிவை ரத்து செய்து பெருமபான்மை நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்தனர்.

    ஆனால், இதில் மாறுபட்ட தீர்ப்பை நீதிபதி டிஒய் சந்திரசூட் வழங்கினார். மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆதார் சட்டத்தை நிறைவேற்றிய விதமே தவறானது. புறவழியாக ஆதார் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சாடினார். அவர் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

    ஆதார் சட்டத்தை நிதி மசோதாவாக மக்களவையில் நிறைவேற்றி இருந்திருக்கத் தேவையில்லை. அந்த மசோதாவை மாநிலங்களவைக்குக் கொண்டு செல்லாமல் மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றி ஆதார் சட்டத்தை கொண்டுவந்தது அரசியலமைப்புச் சட்டசத்துக்கு விரோதமானது. மோசடியாகும்.

    அரசியலமைப்புப் பிரிவு 110 பிரிவை மீறி நிறைவேற்றப்பட்டு இருப்பதால், ஆதார் சட்டத்தை ரத்து செய்யவும் முகாந்திரம் இருக்கிறது. இப்போது இருக்கும் ஆதார் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டது எனக் கருத முடியாது.

    இன்றைய சூழலில் மொபைல்போன் மிக முக்கியமான கருவியாக மக்களின் வாழ்க்கையில் மாறிவிட்டது. செல்போனில் ஆதார் விவரங்களை இணைத்த விவகாரம் தனிநபர்களின் அந்தரங்கத்துக்கும், சுதந்திரத்துக்கும், சுய அதிகாரத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். மொபைல் சேவை நிறுவனங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் ஆதார் விவரங்களை திருத்தக்கூடிய வாய்ப்பையும் உருவாக்கி இருந்தது.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச்சட்டத்தின்படி வங்கியில் உள்ள ஒவ்வொரு வாடிக்கையாளரும் கடன் பெற்றவர்கள். அந்த அடிப்படையில்தான் வங்கியில் கணக்கு தொடங்கும் ஒவ்வொரு தனிமனிதர்களையும் தீவிரவாதிபோல் சித்தரித்து, கடன்காரர் போல் பாவித்துள்ளார்கள் இது மிகவும் கொடூரமானது.

    தனிமனிதர்களின் விவரங்களை ஒட்டுமொத்தமாகத் தனியார் நிறுவனங்கள் திரட்டுவதன் மூலம் அதை வேறு எந்தக் காரணங்களுக்காகவும் பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தனிமனிதரின் உரிமையின்றி, அனுமதியின்றி அவரின் விவரங்களை அடுத்தவர்கள் தவறாக பயன்படுத்தவும் அனுமதிக்கிறது.

    தகவல் சுதந்திரம், சுயஉரிமை, மற்றும் புள்ளிவிவரங்கள் பாதுகாப்பு ஆகியவற்றை மீறும்வகையில் ஆதார் திட்டம் இருக்கிறது. அரசின் சலுகைகளைப் பெற ஆதார் கார்டை கட்டாயக்கி இருப்பது, மக்களின் தனிப்பட்ட உரிமையைப் பறிப்பதாகும். குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆதார் வழங்கும் யுஐடிஏஐ நிறுவத்துக்கு இருக்கிறது. ஆனால், முறையான பாதுகாப்பு அம்சம் இல்லாமல் இருக்கிறது.

    இன்று இந்தியாவில் ஆதார் இல்லாமல் வாழமுடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது, இதுவே அரசியலமைப்புச்சட்டம் 14-வது பிரிவை மீறியது போன்றது. நாடாளுமன்றம் ஆதார் குறித்து சட்டம் இயற்ற உரிமை இருக்கும்போது, மக்களின் விவரங்களைப் பாதுகாக்காமல் இருந்தால், அது பல்வேறு உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும்

    இவ்வாறு நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
    ஆதார் எண் இல்லாத காரணத்துக்காக பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது என பள்ளிகளுக்கு ‘ஆதார்’ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Aadhaar #UIDAI
    புதுடெல்லி:

    அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ‘ஆதார்’ அடையாள அட்டை ஆணையம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஆதார் எண் இல்லாத காரணத்துக்காக, சில பள்ளிகள் மாணவர்களை சேர்க்க மறுப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆதார் எண் இல்லாததற்காக, எந்த குழந்தையையும் பள்ளியில் சேர்க்க மறுக்கக்கூடாது என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    அப்படி சேர்க்க மறுப்பது செல்லாது. சட்டப்படி அனுமதிக்கத்தக்கதும் அல்ல. ஆதார் எண் ஒதுக்கப்படும்வரை, வேறு அடையாள அட்டைகள் மூலம் அம்மாணவர்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும். மேலும், பள்ளியிலேயே ஆதார் சேர்க்கை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #Aadhaar #UIDAI
    நாடு முழுவதும் ஸ்மார்ட்போன்களில் நேற்று ஆதார் உதவி அழைப்பு எண் தானாக பதிவானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை வேண்டாதவர்களின் வேலை என்று ஆதார் ஆணையம் குற்றம்சாட்டியது. #AadhaarCommission
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஸ்மார்ட்போன் வைத்துள்ள ஆயிரக்கணக்கானோருக்கு அவர்களின் போனில் நேற்று 1800-300-1947 என்ற இலவச உதவி அழைப்பு எண் பதிவானது. அந்த எண் UI-D-AI என்ற பெயருடன் தொடர்புக்காக சேமித்து வைக்கும் ‘கான்டாக்ட்ஸ்’ பகுதியில் தானாகவே பதிந்தது. இதனால் ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த எண், ஆதார் ஆணையத்துடன் தொடர்பு கொள்வதற்கான எண்ணாக இருந்ததால் அவர்களிடையே மேலும் குழப்பம் அதிகரித்தது.

    இதனால் தங்களது ஆதார் பதிவு தகவல் அனைத்தும் திருடப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆதார் ஆணையத்தை ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் தொடர்பு கொண்டு தங்களது ஸ்மார்ட் போனில் தானாக ஆதார் ஆணைய இலவச உதவி அழைப்பு எண் பதிவானது பற்றி கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்தனர்.

    நாங்களாக தொடர்பு எண்ணை பதிவு செய்யாத பட்சத்தில் இந்த எண் மட்டும் மந்திரம் போட்டது போல் எப்படி தொடர்பு எண் சேமிப்பு பகுதியில் பதிவானது என்றும் இவ்வாறு செய்ய முடிந்தால் எங்களது செயல்களை கண்காணித்து தகவல்களை சேகரிக்க முடியாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? எனவும் அவர்கள் சரமாரியாக டுவிட்டர் பதிவில் கேள்வியும் எழுப்பினர்.

    அப்போதுதான் அது, ஆதார் ஆணையத்துடன் தொடர்பு கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த உதவி போன் நம்பர் என்பது தெரிய வந்தது.

    அதே நேரம் ஐ போன் போன்ற விலையுயர்ந்த போன்களிலும், சாதாரண செல்போன்களிலும் இந்த இலவச உதவி எண் தானாக பதிவாகவில்லை.

    இது குறித்து ஆதார் ஆணையம் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஆதார் ஆணையத்தின் பயன்பாட்டில் இல்லாத பழைய உதவி எண் ஸ்மார்ட்போனில் தானாக பதிவானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆதார் ஆணையம் சார்பாக எந்தவொரு செல்போன் நிறுவனத்திடமோ அல்லது செல்போன் சேவை வழங்கும் நிறுவனத்திடமோ இதுபோன்ற வசதியை இணைக்குமாறு அறிவுறுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    ஸ்மார்ட்போன்களில் பதிவான எண் என குறிப்பிடப்படும் 1800-300-1947 என்பது ஆதார் ஆணையத்தின் சரியான இலவச அழைப்பு எண் அல்ல. மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டாத இந்த வீண் வேலையை சிலர் செய்துள்ளனர்.

    மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உபயோகத்தில் இருக்கும் ஆதார் ஆணையத்தின் சரியான இலவச உதவி அழைப்பு எண் 1947 ஆகும்.

    இதேபோல் பொதுச் சேவை எண்கள் பட்டியலிலும் 1800-300-1974 அல்லது 1947 என்ற எண்களை இணைக்குமாறு எந்தவொரு தொலைத் தொடர்பு நிறுவனத்திடமோ அல்லது செல்போன் தயாரிப்பு நிறுவனத்திடமோ ஆதார் ஆணையம் சார்பில் வலியுறுத்தப்படவில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    அதேநேரம் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ தலைவர் ஆர்.எஸ்.சர்மவை ஆதார் எண் விவகாரத்தில் வம்புக்கு இழுத்த பிரான்ஸ் நாட்டின் பிரபல ஹேக்கரான எலியட் ஆல்டர்சன், தனது டுவிட்டர் பதிவில் ஆதார் ஆணையத்தை கிண்டலடித்தார்.

    அவர் தனது பதிவில், “ஆதார் அட்டை இல்லாமலேயே பல்வேறு செல்போன் சேவை நிறுவனங்கள் மூலம் ஏராளமானோருக்கு ஆதார் செயலி பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த போன் நம்பர் உங்களுக்கு தெரியாமலேயே உங்களது செல் போன்களில் இயல்பாக எப்படி கட்டமைக்கப்பட்டது? இதற்கு உங்களால் விளக்கம் அளிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் பலர், தானாக பதிவாகி இருந்த ஆதார் ஆணையத்தின் இலவச உதவி போன் எண்ணை படம் பிடித்து அதை பகிர்ந்து கொண்டு தங்களது உரையாடல்களில் கேலியும் செய்தனர்.



    ஒரு குறும்புக்காரர் தனது டுவிட்டர் பதிவில், ‘ஆதார் ஆணையத்தின் போன் எண் மந்திரம் போட்டதுபோல் எனது செல்போனில் பதிவாகி இருக்கிறது. அமெரிக்காவின் என்.எஸ்.ஏ. உளவு நிறுவனம் போல் அவர்கள் எங்களை மோப்பம் பிடிக்கிறார்களா?...’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    எது எப்படியோ, ஸ்மார்ட் போனில் தானாக பதிவான ஆதார் ஆணையத்தின் இலவச அழைப்பு உதவி எண் இந்தியாவை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது என்றே கூறவேண்டும். அது இன்னும் கூட யாருக்கும் புரியாத புதிர்தான். #AadhaarCommission
    ×